முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகத்தின் மராமத்து பணிக்கு பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி மறுப்பு சோதனைச்சாவடியில் சரக்குவேன் நிறுத்தி வைப்பு
முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகத்தின் மராமத்து பணிக்கு பொருட்கள் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி மறுத்ததால் சோதனைச்சாவடியில் சரக்குவேன் நிறுத்தப்பட்டது.
தேனி:
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் பராமரிப்பு பணிகளுக்கு கேரள அரசும், கேரள வனத்துறையும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது
இந்நிலையில் தேக்கடியில் உள்ள முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகம் மற்றும் பணியாளர் குடியிருப்பில் ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், குடிநீருக்கான பிளாஸ்டிக் தொட்டி, குழாய்கள் போன்றவை சேதமடைந்துள்ளது. அதை மராமத்து செய்வதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதியளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் இன்று காலை ஒரு சரக்கு வேனில் ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி, குழாய்கள் ஆகியவற்றை கொண்டு சென்றனர்.
அனுமதி மறுப்பு
அப்போது தேக்கடி நுழைவு பகுதியிலுள்ள கேரள வனத்துறை சோதனைச்சாவடியில் அந்த வேனை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்த வனத்துறையினர் சோதனைச்சாவடியை தாண்டி பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர்.
அந்த பொருட்களை மராமத்து பணிக்காக கொண்டு செல்வதாக தமிழக அதிகாரிகள் எடுத்துக்கூறியும், இரவு வரை அவர்கள் சரக்கு வேனை அனுப்ப மறுத்தனர்.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,"முல்லைப்பெரியாறு அணையை சார்ந்த அனைத்து உரிமைகளும் தமிழகத்துக்கு சொந்தமானது. அணை பகுதியில் நடைபெறும் வழக்கமான மராமத்து பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லக்கூட கேரள வனத்துறை அனுமதிப்பதில்லை. பணியாளர் குடியிருப்பில் உடைந்த கூரையை சரிசெய்ய ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், குடிநீர் பிடிப்பதற்கான பிளாஸ்டிக் தொட்டி ஆகியவற்றை கொண்டுசென்றபோதும் அனுமதிக்கவில்லை" என்றனர்.
Related Tags :
Next Story