கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?


கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?
x
தினத்தந்தி 11 March 2022 9:29 PM IST (Updated: 11 March 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ள நிலையில் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஆளும் பா.ஜனதா ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

பா.ஜனதா ஆட்சி

  கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. 14 மாதங்கள் கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.

  2 ஆண்டுகள் ஆட்சி செய்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன. கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

பா.ஜனதா வெற்றி

  இதன் மூலம் கர்நாடகத்தில் மக்கள் காங்கிரசை ஆதரிக்க தயாராக உள்ளதாக அக்கட்சி தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக பெலகாவி மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா வெறும் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே தொகுதியில் பா.ஜனதா கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

  பா.ஜனதாவின் கோட்டையான பெலகாவி தொகுதியில் பா.ஜனதா வெற்றிக்கு வாக்குகள் வித்தியாசம் 5 ஆயிரமாக குறைந்ததை கண்டு ஆளும் பா.ஜனதா தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்தடுத்து வந்த சட்டசபை இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் தனது வெற்றியை பதிவு செய்தது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்திலேயே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

தேர்தல் முடிவுகள்

  இதற்கிடையே உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் அந்த 4 மாநிலங்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

  கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார்கள். அரசுக்கு எதிராக மக்களின் அதிருப்தி இருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியின் அலையில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று கருதுகிறார்கள். அதனால் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தி அதன் மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்று பா.ஜனதா தலைவர்கள் ஆலோசிக்க தொடங்கியுள்ளனர்.

சட்டசபை கலைப்பு

  பிரதமர் மோடி அடுத்த மாதம்(ஏப்ரல்) கர்நாடகம் வருகிறார். அவர் வந்து சென்றதும், மந்திரிசபையை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகு சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினால் வெற்றி எப்படி இருக்கும் என்பது குறித்து கர்நாடக மக்களின் மனநிலையை அறிய தனித்தனி அமைப்புகள் மூலம் 3 கருத்து கணிப்புகளை நடத்த பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் இரண்டில் பா.ஜனதாவுக்கு சாதகமாக வந்தால் தற்போதுள்ள சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த மாத இறுதியில் குஜராத் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அத்துடன் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஒருவேளை மக்களின் மனநிலை பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லாவிட்டால் தற்போதுள்ள சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த பிறகே தேர்தலை சந்திக்கலாம் என்ற மனநிலையில் பா.ஜனதா தலைவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
  
நளின்குமார் கட்டீல் நீக்கம்

இதற்கிடையே கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலை நீக்கிவிட்டு கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமனம் செய்ய பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் மந்திரிசபையில் சரியாக செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய முகங்களை சேர்க்கவும் பா.ஜனதா மேலிடம் ஆர்வம் காட்டுகிறது. இதில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு மந்திரிசபையில் இருந்து கல்தா வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story