தீ விபத்தை கட்டுப்படுத்துவது குறித்து அரசு பள்ளி மாணவன் புதிய கண்டுபிடிப்பு
மின்சாதன பொருட்களில் ஏற்படும் தீயினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம், விபத்திலிருந்து மின்சாதன பொருட்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என அரசு பள்ளி மாணவன் புதிய மென்பொருளை கண்டுபிடித்துள்ளார்.
வாணாபுரம்
மின்சாதன பொருட்களில் ஏற்படும் தீயினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம், விபத்திலிருந்து மின்சாதன பொருட்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என அரசு பள்ளி மாணவன் புதிய மென்பொருளை கண்டுபிடித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவன்
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி கலைவாணி. இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகன் ஜவகர் (வயது 15),் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-வது வகுப்பு படித்து வருகிறார்.
பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் அதன்மூலம் அதிகளவில் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் ஒரு மென்பொருளை உருவாக்கி அதன்மூலம் மின்சாதனங்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க வேண்டும் என்று மாணவன் ஜவகருக்கு தோன்றியது.
இதனை உருவாக்கும் முயற்சியில் கடந்த 2 வருடங்களாக ஈடுபட்ட அவர் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தானாக இயங்கி தீயை அணைக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார்.
மென்பொருள் சாதனம்
இதுகுறித்து மாணவர் ஜவகர் கூறுகையில் பொதுவாக ஏ.சி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட எந்திரங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் வாயுக்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் சென்சார் மூலம் செயல்படும். எந்திரத்தில் தீ ஏற்படும்போது உடனடியாக எந்திரத்திற்கு வரும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது
அடுத்த வினாடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்துகிறது. தானியங்கி முறையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் இந்திய எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ஒரு மென்பொருள் சாதனம் கண்டுபிடித்துள்ளார்.
இதில் அன்னியர்கள் நுழைவதை உடனடியாக தெரிவிக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஊடுருவுவதை தடுக்கவும் ஒரு கருவி கண்டுபிடித்துள்ளார்.
தற்போது இவர் வடிவமைத்துள்ள கருவி 10 மீட்டர் வரை அன்னியர்கள் வருவதை தெரியப்படுத்தும் வகையில் உள்ளது. அதனை மேம்படுத்தினால் 50 கிலோமீட்டர் வரை அன்னியர்கள் ஊடுருவலை கண்டுபிடித்து தடுத்துவிடலாம்.
ஆயுதங்கள்
மேலும் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் எல்லை மீறி கொண்டு வரப்பட்டாலும் அதனை இந்த கருவி காட்டிக் கொடுத்துவிடும் என்று மாணவர் விளக்கம் அளித்தார்.
பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவர் ஜவகர் தனது கண்டுபிடிப்பை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதற்கான செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதனை பாராட்டி மாணவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story