ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கைது


ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 9:34 PM IST (Updated: 11 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

ஒப்பந்த பணிக்கான நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

வாணியம்பாடி

ஒப்பந்த பணிக்கான நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தீக்குளிக்க முயன்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

நிலுவைத்தொகை

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த பீமகுளம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 50). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர், ஆலங்காயம் மற்றும் மாதனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அரசுப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2018-2019-ம் ஆண்டு வாணியம்பாடி, வளையம்பட்டு பகுதியில் ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்தில் அம்மா பூங்கா பணி செய்துள்ளார்.

மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பிட பணி ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தில் செய்துள்ளார். இரண்டு பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.8 லட்சத்து 21 ஆயிரம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதுகுறித்து பலமுறை கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் நிலுவைத் தொகை வழங்காததால் விரக்தி அடைந்த சம்பத், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தீக்குளிக்கப் போவதாக கூறி, அலுவலகத்தின் முகப்புப் பகுதியில் அமர்ந்தார். 
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி, ஆலங்காயம் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விரைந்து வந்த போலீசார் சம்பத்தை கைது செய்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Next Story