பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் சசிகலாவுக்கு ஜாமீன்


பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் சசிகலாவுக்கு ஜாமீன்
x
தினத்தந்தி 11 March 2022 9:34 PM IST (Updated: 11 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

சிறையில் சொகுசு வசதிகள் பெற ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவுக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம்(ஏப்ரல்) 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பெங்களூரு:

ரூ.2 கோடி லஞ்ச வழக்கு

  சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். சிறைத்தண்டனை முடிந்த நிலையில் தற்போது 3 பேரும் விடுதலையாகி விட்டனர். இதற்கிடையில், சிறைவாசம் அனுபவித்த போது சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், இதற்காக சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

  இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டுகளாக இருந்த கிருஷ்ணகுமார், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர் ஆகிய 4 பேர் மீதும் விசாரணை நடத்த ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு கர்நாடக அரசு அனுமதியும் வழங்கி இருந்தது.

விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

  இதையடுத்து, ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார், தங்களது விசாரணையை முடித்து பெங்களூரு 23-வது கூடுதல் சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார்கள். அந்த குற்றப்பத்திரிகையில் பரப்பனஅக்ரஹாரா சிறை சூப்பிரண்டுகளாக இருந்த கிருஷ்ணகுமார் முதல் குற்றவாளியாகவும், 2-வதாக டாக்டர் அனிதா, 3-வதாக சுரேஷ், 4-வதாக கஜராஜ் மாகனூர், 5-வதாக சசிகலா, 6-வதாக இளவரசி ஆகிய 6 பேரும் சேர்க்கப்பட்டு இருந்தார்கள்.

  அதைத்தொடர்ந்து, கடந்த மாதம்(பிப்ரவரி) 11-ந் தேதி நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் ரூ.2 கோடி லஞ்ச வழக்கு முதன் முதலாக விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள 6 பேரும், அடுத்த விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும், இதற்காக 6 பேருக்கும் சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 11-ந் தேதி(அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

சசிகலா நேரில் ஆஜர்

  அதன்படி, இந்த லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை நேற்று பெங்களூரு விதானசவுதா அருகே எம்.எஸ்.பில்டிங் கட்டிடத்தில் உள்ள பெங்களூரு 23-வது கூடுதல் சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராக கடந்த மாதம் 11-ந் தேதி சசிகலா உள்பட 6 பேருக்கும் உத்தரவிட்டு இருந்ததால், நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலா, இளவரசி ஆகிய 2 பேரும் பெங்களூருவுக்கு வந்தனர்.

  காலை 10.40 மணியளவில் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களது வக்கீல்கள் கோர்ட்டுக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து, காலை 11 மணியளவில் இந்த லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சசிகலா, இளவரசி ஆகிய 2 பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜரானார்கள். அதுபோல், சிறை அதிகாரிகளான சுரேஷ், கஜராஜ் மாகனூரும் ஆஜரானார்கள்.

ஜாமீன் வழங்கப்பட்டது

  இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கிருஷ்ணகுமார், 2-வது குற்றவாளியான டாக்டர் அனிதா ஏற்கனவே கா்நாடக ஐகோர்ட்டில் தங்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கி இருந்ததால், 2 பேரும் நேற்று ஆஜராகவில்லை. பின்னர் சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் கவுதம், இளவரசி தரப்பில் ஆஜரான வக்கீல் ஆகியோர் வாதாடினார்கள். அப்போது சசிகலா, இளவரசி ஆகிய 2 பேருக்கும் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்கள். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

  இதையடுத்து சசிகலா, இளவரசி ஆகிய 2 பேரும் தலா ரூ.3 லட்சம் பிணைத்தொகை செலுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். உடனடியாக சசிகலா தரப்பில் இருந்து ரூ.6 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, சசிகலா, இளவரசிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி லட்சுமி நாராயண பட் உத்தரவு பிறப்பித்தார். அதன்பிறகு, அரசு தரப்பில் வக்கீல் சரோஜா ஆஜராகி வாதிட்டார்.

ஏப்ரல் 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

  அதே நேரத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை நகல் சசிகலா, இளவரசி தரப்பு வக்கீல்களிடம் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஏப்ரல்) 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி லட்சுமி நாராயண பட் உத்தரவு பிறப்பித்தார். அன்றைய தினம் (ஏப்ரல் 16-ந் தேதி) சசிகலாவும், இளவரசியும் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளர். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் இருந்து சசிகலா காரில் புறப்பட்டு சென்றார்.

  இதுகுறித்து சசிகலா தரப்பு வக்கீல் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த வழக்கில் ரூ.3 லட்சம் பிணைத்தொகை செலுத்தும்படி நீதிபதி கூறினார். அதன்பேரில், ரூ.3 லட்சம் பிணைத்தொகை செலுத்தியதும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்’’, என்றார்.

கோர்ட்டு வளாகத்தில் தள்ளுமுள்ளு

பெங்களூரு எம்.எஸ்.பில்டிங்கில் உள்ள கோர்ட்டில் சசிகலா நேற்று நேரில் ஆஜராகி இருந்தார். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட செய்தியை சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவும் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஊடகத்தினர் அங்கு குவிந்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சசிகலா காரில் ஏறி செல்ல முயன்றார். 

அப்போது அவரிடம் பேட்டி எடுக்க முயன்றதால், தள்ளுமுள்ளு உண்டானது. ஆனால் சசிகலா பேட்டி அளிக்கவில்லை. பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நிலைமையை சரி செய்தனர்.

அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் சென்ற சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்த சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டில் நேரில் ஆஜரான சசிகலா, பின்னர் கோர்ட்டில் இருந்து அ.தி.மு.க. கட்சிக்கொடியுடன் கூடிய காரில் ஏறி சென்றார். சிறையில் இருந்து விடுதலையானது முதல் அவர் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் காரில்தான் அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அ.தி.மு.க. கட்சி கொடியுடன் கூடிய காரை பயன்படுத்தக்கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அவர் கட்சி கொடியுடன் கூடிய காரை பயன்படுத்தி வருகிறார். அதேபோல் நேற்று பெங்களூரு கோர்ட்டில் இருந்து அவர் கட்சி கொடியுடன் கூடிய காரில் புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story