காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கும்; கர்நாடக முதல்-மந்திரி திட்டவட்டம்
பெங்களூருவை சுற்றிலும் 4 செயற்கைகோள் நகரங்கள் உருவாக்கப்படும் என்றும், மேகதாது திட்டப்பணிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
காவிரி ஆறு
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் காவிரி ஆறு, விவசாயத்திற்கும் பெருமளவு பயன்பட்டு வருகிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக காவிரி நிர்வாக ஆணையம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த நீர் பங்கீட்டு முறையை பின்பற்றி வருகிறது.
இருப்பினும் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் தமிழகமும், கர்நாடகமும் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது.
மேகதாதுவில் புதிய அணை
பெங்களூரு உள்பட சில மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், நீர் மின்சார உற்பத்திக்காகவும் மேகதாதுவில் புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக விளக்கம் அளித்தது. ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகதாதுவில் புதிய அணை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார். இது பெரும் விவாத பொருளாக மாறியது. இதையடுத்து பெங்களூருவில் நடந்த தென்மாநிலங்கள் மாநாட்டில் பேசிய மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திர் சிங் ஷெகாவத், காவிரி நீர் பிரச்சினையில் சுமுக தீர்வை எட்ட தமிழகமும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றால் அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார். அவர் கூறிய இந்த கருத்தும் விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
நவீன போக்குவரத்து
அதாவது பெங்களூருவில் ஒரு தனியார் ஆங்கில அச்சு ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பெங்களூருவின் மக்கள்தொகை தற்போது 1.30 கோடியாக உள்ளது. இது வருகிற 2040-ம் ஆண்டுக்குள் 4 கோடி வரை உயரும் நிலை உள்ளது. அதனால் பெங்களூரு நகரை செயற்கைகோள்களால் சூழப்பட்ட கோளை போல் வளர்க்க வேண்டும். அதனால் பெங்களூருவை சுற்றிலும் 4 செயற்கைகோள் நகரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல தொடர்பு வசதிகள், சாலை, ரெயில், நவீன போக்குவரத்து முறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
புதிய பெங்களூரு
பயணிகளுக்கு எளிதான போக்குவரத்து வசதி கிடைக்கவும் வசதிகள் செய்து தரப்படும். பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் புதிய பெங்களூருவை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவை சுற்றி 4 நகரங்கள் அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையில் சிறந்த விளங்கும் வகையில் இருக்க வேண்டும்.
அதாவது சுகாதார நகரம், ஒருங்கிணைந்த தொழில் நகரம், விமானவியல், பாதுகாப்புத்துறை தொடர்பான விஷயங்கள் நடைபெற முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அந்த புதிய செயற்கைகோள் நகரங்களில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கும். புதிய கர்நாடகத்தை உருவாக்கி அதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு வலு சேர்ப்போம்.
இந்த ஆண்டே தொடங்கப்படும்
கர்நாடகத்தில் புதிதாக ஒருங்கிணைந்த 6 நகரங்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இந்த நோக்கத்தில் கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளேன். இவை ஒருங்கிணைந்த தொழில் நகரங்களாக இருக்கும். இவை திட்டமிட்டு நகரங்களை உருவாக்குவதற்கு முன்மாதிரியாக அமையும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனங்களை போல் கர்நாடகத்தில் 6 கர்நாடக தொழில்நுட்ப நிறுவனங்களை(கே.ஐ.டி.) உருவாக்க முடிவு செய்துள்ளேன்.
இதன் மூலம் ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்று கருதி அதில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்த நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். ஏழைகள் சொந்த வீடுகள் கட்டிக்கொள்ள நிலம் ஒதுக்கப்படும். மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கும். அதற்கான பணிகள் தொடங்கும். அதனால் தான் பட்ஜெட்டில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் இந்த ஆண்டே மேகதாது திட்ட பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story