ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம்: எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் நுகர்வோர்களுக்கு கலெக்டர் அறிவுரை
ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம் எனவே எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நுகர்வோர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளாா்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் நடந்த கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பரிசு வழங்கினார்.
தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், நுகர்வோர் விலை கொடுத்து வாங்கும் பொருட்களுக்கு உரிய ரசீது பெற்றிருக்கும் நிலையில், அந்த பொருளில் அல்லது சேவையில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்து தீர்வு பெறலாம்.
எந்திரமயமான இன்றைய உலகில் நாம் ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றப்படுகிறோம். இதற்கு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இல்லாததே காரணம். ஆகவே நுகர்வோர் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நுகர்வோர்கள் பெரும்பாலும் தேவைக்கு அதிகமான நுகர்வை தவிர்க்க வேண்டும், பொருட்களை எடுக்கும் போது அவற்றின் விலை, தேதி, தரம், முத்திரை போன்றவற்றை சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விழாவில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரகுபதி, இணைப் பதி வாளர் (கூட்டுறவு சங்கங்கள்) நந்தகுமார், நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் சிற்றரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர் கைலாஷ்குமார், மற்றும் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story