பெண் பார்க்க சென்றபோது வீட்டு சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி மேஸ்திரி பலி
பெண் பார்க்க சென்றபோது வீட்டு சுவற்றில் மோட்டார் சைக்கிள் மோதி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
மோகனூர்:
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள காடுவெட்டி கொங்கம்பட்டியை சேர்ந்தவர் மருதமுத்து. பால் வியாபாரி. இவருடைய மகன் வீரமலை (வயது 25). இவர் நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் தங்கி, கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை, தனக்கு பெண் பார்க்க செல்வதாக கூறி நண்பரான முருகேசன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கினார்.
பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு லத்துவாடியில் இருந்து என்.புதுப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் குறிஞ்சி நகர் பகுதியில் சாலையோரம் இருந்த வீட்டின் சுவற்றின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரமலை படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரமலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story