மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து 2-ந் தேதி மயானக்கொள்ளை, 5-ந் தேதி தீமிதித்தல், 7-ந்தேதி தேரோட்டம், 9-ந்தேதி புஷ்ப பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. 10-ம் நாள் திருவிழாவான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை 4 மணிக்கு பூசாரிகள் உற்சவ அம்மனை பல்லக்கில் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்த அம்மன் பம்பை மேளம் முழங்க மந்தைவெளியில் எழுந்தருளினார். இதையடுத்து ஊரின் முக்கியப் பிரமுகர்கள் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டவுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள கங்கையம்மன் குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனுக்கு பூக்கள், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழுத் தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி, கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story