மயிலம் அருகே பொதுமக்களிடம் ரகளை: போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்த வடமாநில வாலிபர் வெளியே வர மறுத்தவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்


மயிலம் அருகே பொதுமக்களிடம் ரகளை: போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்த வடமாநில வாலிபர் வெளியே வர மறுத்தவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
x
தினத்தந்தி 11 March 2022 11:02 PM IST (Updated: 11 March 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் போலீசாருக்கு பயந்து கிணற்றில் குதித்தார். வெளியே வர மறுத்த அவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மயிலம்

குடிபோதையில் ரகளை

மயிலம் அருகே தென்பசாரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் இருந்த கடை மற்றும் அப்பகுதி மக்களிடம் வடமாநிலத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக நெடுஞ்சாலை ரோந்து வந்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வட மாநில வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

கிணற்றில் குதித்தார்

அப்போது அவர் போலீசாருக்கு பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனே போலீசாரும் விடாமல் அவரை துரத்தினர். ஆனால் அந்த வாலிபர் அவனம்பட்டு எல்லையில் சென்றதும் அங்குள்ள விவசாய கிணற்றில் திடீரென குதித்து விட்டார். இதை பார்த்த போலீசார் வாலிபரை மேலே வருமாறு கூறினர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். 
இதையடுத்து திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு மயிலம் போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி வடமாநில வாலிபரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பரபரப்பு

பொதுமக்களிடம் ரகளை செய்த வடமாநில வாலிபர் போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்த சம்பவம் தென்பசார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story