பந்தல் முறை காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


பந்தல் முறை காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 11 March 2022 11:17 PM IST (Updated: 11 March 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை சுற்றுப்பகுதியில் பந்தல் முறை காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தளி
உடுமலை சுற்றுப்பகுதியில் பந்தல் முறை காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
காய்கறிகள் பயன்பாடு
உடுமலை, தளி, அமராவதி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட நீண்ட கால பயிர்களையும் காய்கறிகள், தானியங்கள் போன்ற குறுகிய காலப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிப்பதால் பொதுமக்களும் அதை விரும்பி செய்கின்றனர்.
இதனால் அன்றாட உணவில் காய்கறிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் உழவர் சந்தை, தினசரி சந்தை மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை உற்சாகத்தோடு வாங்கி செல்கின்றனர். மேலும் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வருகின்ற காய்கறிகள், கீரைகள் விவசாயிகளுக்கு பெரியளவில் நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை.
 விவசாயிகள் ஆர்வம்
இதன் காரணமாக சமீப காலமாக விவசாயிகள் பல்வேறு விதமான காய்கறிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் உடுமலை, தளி, அமராவதி பகுதியில் கிணறு, ஆழ்குழாய் கிணறு திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையை நீராதாரமாக கொண்டு கத்தரி, அவரை வெண்டை, தர்பூசணி, வெள்ளரி, அவரை, புடலை உள்ளிட்ட காய்கறிகள் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில விவசாயிகள் பந்தல் முறையில் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.  
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பந்தல் முறை சாகுபடி
பந்தல் முறையில் சாகுபடி செய்வதற்காக முதலில் 5 அடி உயரமுள்ள கற்களை நடவு செய்து அதை ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் வகையில் கம்பிகளை கொண்டு இணைப்பு ஏற்படுத்த வேண்டும். பின்னர் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை நடவு செய்து கொடி படர்ந்த பின்பு அதை கயிற்றால் கட்டி பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்து வோம். இந்த முறையில் செடிகள் பராமரிப்பு, உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். காய்களும் நிலத்தில் முட்டாது என்பதால் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் பறிப்பதும் எளிது. பொதுமக்களும் காய்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். பந்தல் முறையில் விளைந்த காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் விலையும் உள்ளது. இதனால் பந்தல் முறையில் சாகுபடி செய்வதை உற்சாகத்தோடு மேற்கொள்கிறோம். இதற்காக ஒரு முறை முதலீடு செய்தாலே போதுமானது. அதில் ஆண்டுக்கணக்கில் நிலையான பலனை பெறலாம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story