தேர்களுக்கு அலங்கார துணிகள் கட்டும் பணி தீவிரம்


தேர்களுக்கு அலங்கார துணிகள் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 March 2022 11:36 PM IST (Updated: 11 March 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேர்களுக்கு அலங்கார துணிகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேர்களுக்கு அலங்கார துணிகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழித்தேர்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆழித்தேர் பிரசித்து பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை ஆழித்தேர் பெற்றது. ஆழித்தேர் திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.
ஆழித்தேர் மொத்தம் 96 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. தேரை சீராக இயக்க திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்கள் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
300 டன்
மேலும் 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகின்றது. இந்த தேரின் முன்பகுதியில்  4 குதிரைகள், யாழி உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்படும். அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாகும். மிக பிரமாண்டமான ஆழித்தேரில் தியாகராஜர் வீற்றிருக்க 4 வீதிகளில் வீதிஉலா வரும் ஆழித்தேரின் அழகு காண்போரை வியப்பில் ஆழ்த்தும். 
அலங்கரிக்கும் பணி
ஆழித்தேரோட்ட விழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஆழித்தேர், அதனுடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களும் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று கமலாம்பாள் தேருக்கு சீலை(அலங்கார துணிகள்) கட்டும் பணி தொடங்கியது. இதற்காக அலங்கார துணிகள் மூலம் தேர் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. ஆழித்தேரோட்டத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Next Story