பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகள் தொடங்குவது எப்போது?


பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகள் தொடங்குவது எப்போது?
x
தினத்தந்தி 11 March 2022 11:51 PM IST (Updated: 11 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்கிய நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய ஆய்வறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பஸ் நிலைய பணிகள் எப்போது, தொடங்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருச்சி, மார்ச்.12-
முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்கிய நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய ஆய்வறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் பஸ் நிலைய பணிகள் எப்போது, தொடங்கும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருங்கிணைந்த பஸ் நிலையம்
திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 350 பஸ்களை நிறுத்தி வைக்கும் வசதியுடன், தனியாக டாக்ஸி ஸ்டாண்ட், ஆம்னி பஸ்களுக்கான நிறுத்தம், ஓட்டல்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன்  ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்போல, பஸ் நிலையத்தையொட்டி மொத்த மற்றும் சில்லரை காய்கறி மார்க்கெட்டும் அமைய உள்ளது.
மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 30-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.832 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மட்டும் 48 ஏக்கர் பரப்பளவில் ரூ.140 கோடியில் அரசின் உட்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. கனரக சரக்கு வாகன முனையம் அமைக்க ரூ.76 கோடி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.75 கோடி, பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைக்க ரூ.59 கோடி என ரூ.350 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
அதே வேளையில் பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) தயாரிப்பதற்காக திருச்சி மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ஆலோசகர், மாநில அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட ஆலோசகர், திட்டத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து டி.பி.ஆர். தயாரிக்க 9 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. பஸ் நிலையத்தையொட்டி மொத்த காய்கறி சந்தையை நிறுவுதல், ஆம்னி பஸ்கள் மற்றும் டிரக்குகளுக்கான முனையத்தை நிர்மாணித்தல் ஆகியவை ஒருங்கிணைந்த பஸ் நிலையத் திட்டத்தின் முக்கிய அங்கங்களாகும்.
மேலும் மண்டலங்கள், நகரங்களுக்கு இடையேயான பஸ் சுழற்சி, பாதசாரிகள் இயக்கம், இணைப்பு பகுப்பாய்வு, இருப்பிட ஆய்வு, அணுகல் சாலைகள் உருவாக்கம், பயணிகள் வசதிகளை உருவாக்குதல், குடிநீர் வழங்குதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமைப்பைத் திட்டமிடுதல். பயணிகளுக்கு கட்டுப்பாட்டு அறை, பஸ் நிலையத்திலிருந்து நெடுஞ்சாலைகள், மருத்துவமனை, போலீஸ் சோதனைச் சாவடி, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை நிலையம் ஆகியவற்றுடன் சிரமமில்லாத அணுகு சாலைகளை நிறுவுதல் ஆகியவை ஆலோசகருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளின் நோக்கங்களில் அடங்கும்.
பணிகள் தொடங்குவது எப்போது?
பஞ்சப்பூரில் பல கள ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், ஆலோசகர் அதன் அறிக்கையை சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் சமர்ப்பித்துள்ளார். அதன் நகல் திருச்சி மாநகராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் தொழில்நுட்பக் குழுவும் இதில் ஈடுபட்டிருந்தது. அவர்கள் திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் படித்தனர்.சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. இந்த மாதத்தின் பிற்பகுதியில் டி.பி.ஆரின் இறுதி ஆய்வு மேற்கொள்ளப்படும். திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த தெளிவான அறிக்கை இம்மாத இறுதிக்குள் தெரியவரும். அதன் பின்னர் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

Next Story