மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் விவரம்
மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
மதுரை,
மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளின் முழுவிவரம் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியானது.
சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் பிரமோற்சவ விழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா காரணமாக திருவிழா கோவிலுக்குள் நடந்தாலும் அதனை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்ய முடியவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால், கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் வழக்கம் போல் சுவாமி வீதி உலாவுடன் நடைபெறும் என்று அரசு அறிவித்தது.
எனவே இந்தாண்டு மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி-அம்மன் வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். ஆனால் விழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியுமா? என்பது பற்றியும், திருவிழாவிற்கான நிகழ்ச்சி நிரல் பற்றியும் கோவிலில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடத்துவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
5-ந் தேதி கொடியேற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய திருவிழா நிறைவுநாளை முடிவு செய்துகொண்டு, அதற்கு ஏற்ப விழா நிகழ்ச்சிகள் வரையறுக்கப்படும்.
அதன்படி சித்திரை பெருவிழா, சித்திரை நட்சத்திர தீர்த்தத்தை முடிவு செய்து காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதாவது, சித்திரை மாதம் அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, 12 நாட்கள் நடைபெறும்.
எனவே இந்த ஆண்டுக்கான விழா வருகிற (ஏப்ரல்) 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள தங்ககொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயம் நடைபெறுகிறது.
தமிழ் புத்தாண்டில் மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி அன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள், கோவிலுக்குள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும். விழாவில் அன்று இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். தமிழ் புத்தாண்டு மற்றும் திருக்கல்யாணம் ஒரே நாளில் வருவதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பக்தர்கள், ஜீவராசிகள் என அனைவருக்கும் அருள்பாலிக்கும் விதமாக அவர்களும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாண கோலத்தை காண வேண்டும் என்பதற்காக ேதரோட்டம் கோலாகலமாக வருகிற 15-ந் தேதி மாசி வீதிகளில் நடக்கிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கள்ளழகர்
இந்த நிலையில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா, தமிழ் புத்தாண்டான 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று மாலை அழகர்கோவிலில் இருந்து அழகர் கள்ளழகர் வேடம் அணிந்து மதுரைக்கு புறப்படுகிறார்.
15-ந் தேதி அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி அழகர் கோவிலின் சித்திரை விழாவுக்கான கொட்டகை முகூர்த்த விழா வருகிற 1-ந் தேதி காலை 10.15 மணிக்கு மேல் 10.30மணிக்குள் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு மேல் 3 மணிக்குள் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்திலும் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுவதாக கள்ளழகர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் ஆவலுடன் காத்திருப்பு
இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநில மக்களும் மதுரை சித்திரை திருவிழாவை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story