தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பராமரிக்கப்படாத சாலை
மதுரை மாவட்டம் சிந்தாமணி வழி கீைறதுரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜூ, மதுரை.
விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் கீழராஜகுலராமன் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள சாலையின் வளைவில் மண்குவியலாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வப்போது சிறு,சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருசாமி, விருதுநகர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் 1- வது வார்டு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை வசதி இல்லை. மேலும் இருக்கும் சாக்கடைகளிலும் கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்குகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
முருகேசன், திருமங்கலம்.
புதிய சாலை வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சில தெருக்களில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் புதிய சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும்.
சுரேஷ், ராஜபாளையம்.
சேதமடைந்த நீர்தேக்க தொட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாம்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அருகில் அங்கன்வாடி மையமும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக சேதமடைந்த நீர்தேக்க தொட்டி அகற்றப்படுமா?
தாஸ், திருப்பத்தூர்.
சரிசெய்யப்படாத சாலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் பாளையம்பட்டி குலாளர் தெருவில் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மணி, அருப்புக்கோட்டை.
Related Tags :
Next Story