அம்மா உணவக பெயர் பதாகையில் ஜெயலலிதா உருவப்படம் மறைப்பு
அம்மா உணவக பெயர் பதாகையில் ஜெயலலிதா உருவப்படம் மறைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தமிழகத்தில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அதன்படி பெரம்பலூரில் அம்மா உணவகம் புதிய பஸ் நிலையத்திலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களை நகராட்சி நிர்வாகம் நடத்தி வருகிறது. அம்மா உணவகத்தில் காலையில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதியம் கலவை சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெரம்பலூருக்கு வரும் அனைத்து தரப்பட்ட பொதுமக்களில் பெரும்பாலானோர் இந்த அம்மா உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரின் பசியை இந்த உணவகம் போக்கியது. இந்த நிலையில் அம்மா உணவகத்தின் வெளியே உள்ள பெயர் பதாகையில் இடம் பெற்றிருந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் மறைக்கப்பட்டு, தற்போது தமிழக அரசு சின்னத்துடன் பெரம்பலூர் நகராட்சி அம்மா உணவகம் என்று எழுதப்பட்ட பதாகை ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க.வினர், அம்மா உணவகத்தில் மீண்டும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை இடம் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story