மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியை மாணவர்கள் முற்றுகை


மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை: பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியை மாணவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 March 2022 2:00 AM IST (Updated: 12 March 2022 2:00 AM IST)
t-max-icont-min-icon

அகஸ்தீஸ்வரத்தில் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியை மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்தாமரைகுளம், 
அகஸ்தீஸ்வரத்தில் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியை மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேராசிரியர்
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் பறக்கை மேலபுல்லுவிளை பகுதியை சேர்ந்த வாசுதேவன் (வயது 41) என்பவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு
இவர் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அவரது தொந்தரவு அதிகரித்ததை தொடர்ந்து மாணவி தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.
உடனே கல்லூரிக்கு சென்று அவரது சகோதரர் பேராசிரியர் வாசுதேவனை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வாசுதேவன், மாணவியின் சகோதரரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசில் புகார்
இதுகுறித்து மாணவி தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் பேராசிரியர் வாசுதேவன் மீது கொலை மிரட்டல், அடிதடி, பெண்மைக்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மாணவியை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. அதே சமயத்தில் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மாணவ, மாணவிகள் முற்றுகை
இந்தநிலையில் நேற்று பேராசிரியர் வாசுதேவன் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த சக மாணவ, மாணவிகள் ஆத்திரமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மீது நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என கூறி திடீரென கல்லூரியை புறக்கணித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேராசிரியரை கல்லூரியில் இருந்து நீக்க கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். பின்னர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story