நெல் மூட்டைகளுடன் வந்த லாரிகளில் சோதனை
தஞ்சை அருகே உரிய ஆவணங்களுடன் நெல் மூட்டைகள் ஏற்றி வரப்படுகிறதா? என லாரிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உரிய ஆவணங்களுடன் நெல் மூட்டைகள் ஏற்றி வரப்படுகிறதா? என லாரிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
படிவங்கள்
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்குவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொண்டுவந்து, அதை தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், ட்ரான்ஸீட் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் கண்காணிப்பு
இந்த படிவங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும், உரிய ஆவணங்கள் இன்றி செல்வதாக கூறி அதை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டை பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய், ஏட்டுகள் செல்வராஜ், நிகிலா, வெற்றிவேல் ஆகியோர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோதனை
அப்போது அவர்கள், அந்த வழியாக நெல் மூட்டைகளுடன் வந்த லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர். மேலும் நெல் மூட்டைகள் எங்கிருந்து ஏற்றி வரப்பட்டு, எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ட்ரான்ஸீட் படிவங்கள் இருக்கிறதா? டிரைவர்களிடம் கேட்டறிந்தனர். இந்த படிவங்கள் இருந்ததால் அந்த நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story