பாதாள சாக்கடை திட்டப்பணி: நாகர்கோவில் நகரில் போக்குவரத்து மாற்றம்
பாதாள சாக்கடைத் திட்டப்பணிக்காக நாகர்கோவில் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
நாகர்கோவில்,
பாதாள சாக்கடைத் திட்டப்பணிக்காக நாகர்கோவில் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
பாதாள சாக்கடைத் திட்டப்பணி
நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கியது. 9 ஆண்டுகளாக நடைபெறும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிகளும் நாகர்கோவில் நகரில் நடந்து வருகிறது.
இந்த இரண்டு பணிகளாலும் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாகவும், சேறும்- சகதியுமாகவும், புழுதி பறக்கும் மண் சாலையாகவும் காட்சி அளிக்கிறது. இதற்கிடையே தமிழக அரசு ஒதுக்கிய ரூ.26 கோடி நிதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
மாற்றுப்பாதையில் இயக்கம்
இந்தநிலையில் கோட்டார் சவேரியார் பேராலய சந்திப்பு முதல் கம்பளம் சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 11-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று சவேரியார் பேராலய சந்திப்பில் இருந்து கம்பளம் சந்திப்புக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கியது. பொக்லைன் எந்திரம் மூலமாக இந்த பணிகள் நடந்தது. இதனால் சவேரியார் பேராலய சந்திப்பு பகுதியிலும், கம்பளம் சந்திப்பு பகுதியிலும் வாகனங்கள் செல்லாமல் இருக்க இரும்பு தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
எந்த வழியாக?...
அதாவது நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சவேரியார் பேராலய சந்திப்பு வழியாக கன்னியாகுமரி, நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம், அஞ்சுகிராமம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் சவேரியார் பேராலய சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு, பீச்ரோடு சந்திப்பு, ஈத்தாமொழி பிரிவு ரோடு, நாயுடு ஆஸ்பத்திரி சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன.
இதேபோல் கன்னியாகுமரி, இருளப்புரம், ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையாக ஆயுதப்படை முகாம் ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிகுளம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன.
போக்குவரத்து நெரிசல்
இதனால் நாகர்கோவில் சவேரியார் பேராலய சந்திப்பு மற்றும் பீச்ரோடு சந்திப்பு, ஈத்தாமொழி பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் இந்த பகுதிகளில் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தி, அனுப்பி வைத்தனர்.
இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் 20 நாட்களுக்கு அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story