திம்பம் மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி; டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
திம்பம் மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திம்பம் மலைப்பாதை
சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை செல்கிறது. மிகவும் குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
இதனால் இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இதில் கனரக வாகனங்கள் இங்குள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாக மாறிவிட்டன.
பள்ளத்தில் பாய்ந்த லாரி
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு கோழி தீவனங்கள் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று காலை சென்று கொண்டு இருந்தது. லாரியை மதுரையை சேர்ந்த தமிமுன் அன்சாரி (வயது 35) என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதையில் உள்ள 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் தமிமுன் அன்சாரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story