ஈரோடு பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா; திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ஈரோடு பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு
ஈரோடு பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஓங்காளியம்மன் கோவில்
ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 6-ந்தேதி கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
கடந்த 7-ந்தேதி கோவிலில் பூச்சாட்டப்பட்டது. 8-ந்தேதி மாலை 6 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு விளக்கு பூஜையும், மாவிளக்கு எடுத்தலும் நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது.
குண்டம் விழா
நேற்று காலை 6 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். விழாவையொட்டி ஓங்காளியம்மன் சிவசங்கரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மறு அபிஷேகமும் நடக்கிறது.
Related Tags :
Next Story