ஹாசனில், காட்டு யானை தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு


ஹாசனில், காட்டு யானை தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு
x
தினத்தந்தி 12 March 2022 3:16 AM IST (Updated: 12 March 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஹாசனில் காட்டு யானை தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ஹாசன்: ஹாசனில் காட்டு யானை தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 தொழிலாளர்கள் சாவு

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா கடேகர்ஜே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி காபி தோட்டமும் அமைந்துள்ளது. இந்த காபி தோட்டத்தில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த சிக்கய்யா (வயது 65), ஈரய்யா (68) ஆகியோர் உள்பட 20 தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை, காபி தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது காட்டு யானையை பார்த்ததும் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை பார்த்ததும் காட்டு யானை அவர்களை பின்தொடர்ந்து விரட்டியது. ஒரு கட்டத்தில், சிக்கய்யா மற்றும் ஈரய்யா ஆகியோர் காட்டு யானையின் பிடியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. மேலும், காலால் மிதித்தது. இதில் சிக்கய்யாவும், ஈரய்யாவும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காட்டு யானையின் ஆவேச தாக்குதலை கண்டு அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மிரண்டு போயினர்.

சாலை மறியல்

பின்னர் தொழிலாளர்கள் மேளம் அடித்தும், கம்பு மற்றும் ஆயுதங்களை காண்பித்தும், கூச்சலிட்டும் காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கடேகர்ஜே உள்பட சுற்றுவட்டார கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள பலியான 2 தொழிலாளர்களின் உடல்களை பேளூர் ரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த சாலையில் கற்கள் மற்றும் முட்களை போட்டு தடுப்பை ஏற்படுத்தினர். சாலை நடுவே வைக்கோலை போட்டு தீயும் வைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேளூர் போலீசாரும், வனத்துறையினரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்கள் பகுதியில் நிரந்தரமாக காட்டு யானை அட்டகாசம் உள்ளது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

நிவாரணம் வழங்குவதாக உறுதி

இதையடுத்து வனத்துறையினர், காட்டு யானை அட்டகாசத்தை தடுப்பதாகவும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார், யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து பேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story