சென்னிமலை பூப்பறிக்கும் மலை புகார் குறித்து ஆர்.டி.ஓ. பிேரமலதா விசாரணை; உரிய ஆவணங்களுடன் நில உரிமையாளர்கள் விளக்கம்
சென்னிமலை பூப்பறிக்கும் மலை புகார் குறித்து ஆர்.டி.ஓ. பிரேமலதா விசாரணை நடத்தினாா். அப்போது உரிய ஆவணங்களுடன் நில உரிமையாளர்கள் விளக்கம் அளித்தனா்.
ஈரோடு
சென்னிமலையில் பூப்பறிக்கும் மலையில் 6¾ ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் உரிய ஆவணம் இன்றி ஆக்கிரமித்து, மலைகளை வெட்டி, மண், கல்லை விற்பனை செய்வதாக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலெக்டரிடம் புகார் மனு வழங்கினார். இதைத்தொடர்ந்து நேற்று இரு தரப்பினரிடமும் ஆர்.டி.ஓ. பிரேமலதா விசாரணை நடத்தினார். அப்போது நில உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த ஆவணங்களையும், முகிலன் தன்னிடம் இருந்த ஆவணங்களையும் ஆர்.டி.ஓ.விடம் வழங்கினார்கள்.
இதுகுறித்து நில உரிமையாளர்கள் தரப்பில் சென்னிமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-
சென்னிமலையில் உள்ள 130 ஏக்கர் நிலத்துக்கு, 1902-ம் ஆண்டில் இருந்து ஆவணங்கள் உள்ளன. கீழ்பவானி கால்வாய் அமைத்தபோது, அங்குள்ள எங்கள் நிலத்தை வழங்கியதற்கு, அரசு சார்பில் ரூ.2 வழங்கியதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. அந்த நிலத்தை 27 உட்பிரிவாக பிரித்து 1927-ம் ஆண்டு பட்டா போடப்பட்டு உள்ளது. 1972-ம் ஆண்டில் இருந்து நாங்கள் அனைவரும் முறையாக வரி செலுத்தி வருகிறோம். 1965-ம் ஆண்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வீடுகள் கட்டி உள்ளனர். 1972-ம் ஆண்டு சர்வே எண் 598 ரயத்துவாரி பட்டா என குறிப்பிட்ட அரசு ஆவணம் எங்களிடம் உள்ளது.
இதற்கான முழு ஆவணங்களையும் ஆர்.டி.ஓ.விடம் கொடுத்துள்ளோம். அந்த இடத்தில் மண், கல் வெட்டவில்லை. சமன்படுத்தும் பணி செய்துள்ளோம். இதுதொடர்பாக அங்கு பொருத்தப்பட்டு இருந்த 19 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆவணமாக கொடுத்துள்ளோம். சிலர் பண ஆதாயத்துக்காக புகார் செய்கின்றனர்’ என்றார்.
Related Tags :
Next Story