கடை வாடகை சீரமைப்பு குழுவில் வணிகர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் - விக்கிரமராஜா


கடை வாடகை சீரமைப்பு குழுவில் வணிகர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் - விக்கிரமராஜா
x
தினத்தந்தி 12 March 2022 3:42 AM IST (Updated: 12 March 2022 3:42 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சித்துறை கடைகள் வாடகை சீரமைப்பு குழுவில் வணிகர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று விக்கிரமராஜா கூறினார்.

நெல்லை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் தமிழக வணிகர் விடியல் மாநாடு மே மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த மாநாடு வணிகர்களுக்கு எழுச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கும். உள்ளாட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கடைகளுக்கான வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வாடகையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று வாடகை சீரமைப்பு குழு, தலைமைச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் வணிகர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். -

சரக்கு சேவை வரி மாற்றம் செய்வதை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். தமிழக பட்ஜெட்டில் வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண உதவிகள் கிடைக்கவும், வணிகர் நல வாரியத்தை செயல்படுத்தவும் அறிவிப்பு வெளியிட வேண்டும். வாடகை பாக்கி உள்ளதாக கூறி கடைகளுக்கு சீல் வைப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மண்டல பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. நெல்லை மண்டல தலைவர் எம்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் நயன்சிங், துணைத்தலைவர் ரெங்கன், மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, வைகுண்டராஜா, நாகராஜன், அல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஆ.செல்வராஜ் வரவேற்று பேசினார். மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், சரக்கு சேவை வரி விகிதத்தில் மாற்றம் செய்வதை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு வருகிற 22-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவது., சரக்கு சேவை வரி தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். மாதந்தோறும் வணிகர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டும். வணிகர்நல வாரியத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story