நெல்லை - தென்காசி இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?


நெல்லை - தென்காசி இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
x
தினத்தந்தி 12 March 2022 4:39 AM IST (Updated: 12 March 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-தென்காசி இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.  நெல்லை-தென்காசி இடையே பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கார், ஆட்டோ, கனரக வாகனங்களும் அதிகளவு இந்த வழித்தடத்தில் செல்கின்றன. போக்குவரத்து அதிகரித்து இருப்பதையொட்டி நெல்லை -தென்காசி ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

நெல்லை அரசு போக்குவரத்துக்கழக பஸ்களும் மற்றும் ஒருசில தனியார் பஸ்களும் நெல்லையில் இருந்து தென்காசிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை, எனவே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். 

காலை நேரத்தில் தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் பஸ்களிலும், நெல்லையில் இருந்து -தென்காசிக்கு செல்லும் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ராமச்சந்திரபட்டணம், பாவூர்சத்திரம், மகிழ்வண்ணநாதபுரம், சாலைப்புதூர், அடைக்கலப்பட்டணம், ஆலங்குளம், மாறாந்தை, சீதபற்பநல்லூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது இருசக்கர வாகனம், ஆட்டோக்கள் மற்றும் டவுன் பஸ்களில் வருகிறார்கள். அங்கிருந்து புறநகர் பஸ்சில் ஏறி நெல்லை மற்றும் தென்காசிக்கு பயணம் செய்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பாவூர்சத்திரத்தை மையப்படுத்தும் வகையில், சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் வழியாகவும், கடையத்தில் இருந்து பாவூர்சத்திரம் வழியாகவும் நெல்லைக்கு பஸ்களை இயக்கினால் வழியோர கிராம மக்கள் பயன் அடைவதுடன், கூட்ட நெரிசல் பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியும் என்கிறார்கள். இதேபோல் நெல்லையில் இருந்தும் புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கினால் பயன் உள்ளதாக இருக்கும், என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

நெல்லை -தென்காசி இடையே இடைநில்லா பஸ்களாக `ஒன் டூ ஒன்' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் இரவு 9 மணிக்கு பிறகும் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘பயணிகளிடம் இருந்து இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. அதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.



Next Story