ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 March 2022 6:38 PM IST (Updated: 12 March 2022 6:38 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்து இருந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஊட்டி

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்து இருந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குவிந்த பயணிகள்

சமவெளி பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி உள்ளது. இதனால் குளு குளு காலநிலை நிலவும் மலைப்பிரதேசமான ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. 

வார விடுமுறை நாளான நேற்று கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான ரகங்களை சேர்ந்த 5,000 பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதில் பூத்துக் குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

இத்தாலியன் பூங்கா மேல்பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் பல வகையான கள்ளி செடிகளை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புல்வெளியில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி பொழுதை கழித்தனர். குதிரை சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர்.

அதேபோல் பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் தங்களது சொந்த வாகனங்களில் வந்ததால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, கலெக்டர் அலுவலக சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டியில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்பே சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி உள்ளது.

Next Story