போலி ஆவணங்கள் மூலம் மனைகளாக விற்கப்பட்ட 64 சென்ட் அரசு நிலம் மீட்பு
வேலூர் அலமேலுமங்காபுரத்தில் போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனைகளாக விற்கப்பட்ட 64 சென்ட் அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் அலமேலுமங்காபுரத்தில் போலி ஆவணங்கள் மூலம் வீட்டுமனைகளாக விற்கப்பட்ட 64 சென்ட் அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
64 சென்ட் நிலம்
வேலூர் மாநகராட்சி 23-வது வார்டு அலமேலுமங்காபுரத்தில் எம்.ஜி.பி.நகர் உள்ளது. இங்குள்ள திருமண மண்டபம் அருகேயுள்ள 64 சென்ட் நிலம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பொழுதை போக்க வசதியாக பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த நிலத்தின் ஒருபகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக தனிநபர் ஒருவர் மண்கொட்டி நிரப்பி உள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கொட்டப்பட்டிருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
மேலும் அவர்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலி ஆவணங்கள்
இந்த நிலையில் இன்று அந்த நிலத்தை ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார், செயற்பொறியாளர் கண்ணன், உதவிகமிஷனர் வசந்தி, கட்டிட பொறியாளர் மதிவாணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த இடம் நகரமைப்பு பொது ஒதுக்கீட்டின்கீழ் அரசுக்கு சொந்தமான நிலம் என்பதும், கடந்த 1982-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் அந்த இடத்தை மர்மநபர்கள் வீட்டுமனையாக மாற்றி பொதுமக்களுக்கு விற்றதும் தெரிய வந்தது.
அரசுக்கு சொந்தமான அந்த நிலத்தை யாரும் பயன்படுத்தவோ, அங்கு கட்டிடம் கட்டவோ கூடாது என்று அதிகாரிகள் அங்கு இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
பூங்காவாக மாற்ற நடவடிக்கை
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மர்மநபர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து 11 வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்துள்ளனர். வீட்டுமனை வாங்கிய நபரின் மகன் தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்ட முயன்றுள்ளார்.
இது அரசுக்கு சொந்தமான நிலம் என்று தெரிவித்து கட்டிடம் கட்டுவதை தடுத்து நிறுத்தி உள்ளோம். பத்திரப்பதிவு துறை மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த நிலத்தின் பத்திரங்கள் ரத்து செய்யப்படும்.
மேலும் இந்த இடத்தின் மதிப்பு பூஜ்ஜியமாக மாற்றி மீண்டும் அரசு நிலமாக மாற்றப்படும். 64 சென்ட் நிலத்தையும் மீட்டு பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
முதற்கட்டமாக நிலத்தை சுற்றி மதில்சுவர் அமைக்கப்பட உள்ளது.
அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்ற மர்மநபர்களை கண்டறிவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story