கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 கடைகள் எரிந்து சாம்பல் ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்


கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 கடைகள் எரிந்து சாம்பல் ரூ.15 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 12 March 2022 8:33 PM IST (Updated: 12 March 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 கடைகள் எரிந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மெயின்ரோட்டில் போலீஸ் நிலையத்திற்கு எதிரே அதே ஊரை சேர்ந்த முத்துரங்கன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு அருகே அதே ஊரை சேர்ந்த சங்கர் என்பவரின் கம்ப்யூட்டர் சென்டரும், வடிவேல் என்பவரின் பெட்டிக்கடையும் உள்ளது. நேற்று இரவு ஓட்டலில் வேலை முடிந்து ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். 
இதனிடையே ஓட்டலில் இருந்த அடுப்பில் தீ முழுவதும் அணைக்கப்படாமல் இருந்தது. அந்த அடுப்பு மீது இருந்த தோசைகல்லின் மேல் ஊழியர்கள் ஈரமான விறகை வைத்து இருந்தனர். காலையில் அடுப்பு எரிக்க ஏதுவாக இருக்கும் என நினைத்து அவர்கள் இவ்வாறு செய்து இருந்தனர். இந்தநிலையில் அடுப்பில் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் நள்ளிரவில் விறகுகள் பற்றி எரிந்தன. 
கியாஸ் சிலிண்டர் வெடித்தது
இந்த தீ அருகில் இருந்த கியாஸ் சிலிண்டருக்கும் பரவியது. இதையடுத்து கியாஸ் சிலிண்டர் வெடித்து ஓட்டலில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. மேலும் இந்த தீ அருகே இருந்த கம்ப்யூட்டர் சென்டருக்கும், பெட்டிக்கடைக்கும் வேகமாக பரவியது. 
இதுகுறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த 3 கடைகளிலும் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story