கர்நாடகத்தில் நகர்ப்புற பஸ்களில் பெண்களுக்கு இலவச அனுமதி?; மந்திரி ஸ்ரீராமுலு பதில்


கர்நாடகத்தில் நகர்ப்புற பஸ்களில் பெண்களுக்கு இலவச அனுமதி?; மந்திரி ஸ்ரீராமுலு பதில்
x
தினத்தந்தி 12 March 2022 9:16 PM IST (Updated: 12 March 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நகர்ப்புற பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படுமா என்பதற்கு மந்திரி ஸ்ரீராமுலு பதில் அளித்துள்ளார்.

சிக்பள்ளாப்பூர்:

அரசு பஸ் பணிமனை திறப்பு

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா நகரை அடுத்துள்ள சங்கேனஹள்ளியில் ரூ.5 கோடி செலவில் புதிதாக அரசு பஸ் பணிமனை கட்டப்பட்டுள்ளது. இந்த பணிமனையின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீராமுலு கலந்துகொண்டு, பணிமனையை திறந்து வைத்தார். இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி எம்.டி.பி. நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய கர்நாடக அரசு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அடுத்து வரும் நாட்களில் எலெக்ட்ரானிக் பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் வரை சரியான முறையில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இலவசம்?

  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஊழியர்கள் பலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 3 ஆயிரம் பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை ஊழியர்களின் நலன் கருதி சீனிவாச மூர்த்தி ஆணைய அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிபாரிசுகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.

  இதுகுறித்து ஏற்கனவே முதல்-மத்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். நகர்ப்புற பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். இதுகுறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. நகர்ப்புற பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

எம்.டி.பி.நாகராஜ்

  இதையடுத்து மந்திரி எம்.டி.பி.நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், சிட்லகட்டா நகரில் அரசு பஸ் பணிமனையை திறக்கவேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாகும். அது தற்போது நிறைவேறி இருப்பது மகிழச்சி அளிக்கிறது. இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு போக்குவரத்து துறையை தனியாா் மயமாக்க முயற்சித்தது.

  சிட்லகட்டாவில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட வேண்டும். இதற்கு மந்திரி ஸ்ரீராமுலு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story