திருவள்ளூர் மாவட்டத்தில் 3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில 3 லட்சத்து 10 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இரண்டாம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தடுப்பூசி போடும் பணி வருகிற 14-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடை இறப்பும், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலை குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளின் இறப்பும் ஏற்படும்.பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இறப்பினால் ஏற்படும் பொருளாதார இழப்பை தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். எனவே கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியம் ஆகிறது.
குளிர் மற்றும் பனி காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீர், உமிழ்நீர், சாணம் போன்றவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 10 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை மொத்தம் 21 நாட்களுக்கு முகாம் நடைபெற உள்ளது. கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசுக்கள், எருதுகள் எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக்குட்டிகள் போன்றவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story