தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ‘திடீர்’ சாலை மறியல்


தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 12 March 2022 9:40 PM IST (Updated: 12 March 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விசைப்படகுகள் கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் தூத்துக்குடியில் மட்டும் விசைப்படகுகள் கடலில் தங்கி மீன்பிடிக்க இதுவரை அனுமதி அளிக்கவில்லை. பல ஆண்டுகளாக கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி கேட்டு போராடி வரும் விசைப்படகு மீனவர்களுக்கு தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசும் மற்றும் மீன்வளத்துறையும் தங்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வாரத்தில் 3 நாட்கள் கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவ பெண்கள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் நேற்று காலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறுகையில், “தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி அளிக்கவேண்டும். அவ்வாறு அனுமதி அளிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story