சாராய விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை
கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மண்மலை, தெங்கியாநத்தம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சாராயம் விற்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் சாராய விற்பனையை தடுப்பது குறித்து ஊர் முக்கியஸ்தர்களுடனான ஆலோசனை கூட்டம் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் மண்மலை, கரடிசித்தூர், மாதவச்சேரி, மாத்தூர், பரிகம், நல்லாத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஊர்முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா பேசுகையில், கடந்த சில நாட்களாக சாராயம் ஏலம் விடுவதாக தகவல் வந்துள்ளது.
எனவே சாராயம் விற்றாலோ, ஏலம் விட்டாலோ ஊர் முக்கியஸ்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சாராயம் விற்பனை நடைபெறுவது குறித்து தொிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பரிந்துரையின்பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மியாட்மனோ, ஏழுமலை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நெடுஞ்செழியன் சீனிவாசன் மற்றும் போலீசார், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story