கசிவு ஏற்பட்ட டேங்கர் லாரியில் இருந்து வேறு லாரிக்கு ரசாயன திரவம் மாற்றம்
நாட்டறம்பள்ளி அருகே ரசாயன கசிவு ஏற்பட்ட டேங்கர் லாரியில் இருந்து வேறு டேங்கர் லாரிக்கு ரசாயன திரவம் மாற்றப்பட்டது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே ரசாயன கசிவு ஏற்பட்ட டேங்கர் லாரியில் இருந்து வேறு டேங்கர் லாரிக்கு ரசாயன திரவம் மாற்றப்பட்டது.
ரசாயன கசிவு
மராட்டிய மாநிலம் கோலேஷ்வர் பகுதியை சேர்ந்தவர் பியாரெலாக் முஜாவர் (வயது 36), லாரி டிரைவர்.
இவர் சென்னையை அடுத்த மணலி பகுதியில் உள்ள ரசாயன நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரியில் ‘புரோப்பிலீன் ஆக்சைடு’ என்ற ரசாயன திரவத்தை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் தானே பகுதிக்கு நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்டார்.
அந்த ரசாயன திரவம் எளிதில் தீப்பற்றக்கூடியதாகும். டேங்கர் லாரி திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் பகுதியில் சென்றபோது லாரியை நிறுத்தி டயரின் அழுத்தத்தை டிரைவர் முஜாவர் சரிபார்த்தார்.
அப்போது ரசாயன திரவ கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக சென்னை மணலிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் போலீசார், தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் இணைந்து அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர்.
வேறு லாரிக்கு மாற்றம்
மேலும் வேலூர் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அப்துல் பாரி, உதவி அலுவலர்கள் பழனி, முகந்தன் ஆகியோர் முகாமிட்டுயுள்ளனர்
டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவு சரி செய்ய சென்னை மணலி தனியார் நிறுவனத்தின் சார்பில் மாற்று டேங்கர் லாரி நேற்று இரவு வரவழைக்கப்பட்டது.
கள்ளுக்குட்டை ஏரி அருகே ரசாயன கசிவு ஏற்பட்ட டேங்கர் லாரி மற்றும் மாற்று டேங்கர் லாரி ஆகியவை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக ரசாயன லாரி மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு குளிரூட்டப்பட்டது.
அதை தொடர்ந்து இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை ரசாயனம் மாற்று டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. பின்னர் அந்த மாற்று டேங்கர் லாரி தானே பகுதிக்கு புறப்பட்டு சென்றது.
11 மணி நேரம் போக்குவரத்து தடை
இதனால் நாட்டறம்பள்ளி பகுதியில் சென்னை -பெங்களூரு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 11 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
கசிவு ஏற்பட்ட டேங்கர் லாரியை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
உடனடியாக ரசாயன கசிவு கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story