விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2767 வழக்குகளுக்கு தீர்வு


விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2767 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 12 March 2022 4:48 PM GMT (Updated: 12 March 2022 4:48 PM GMT)

விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2767 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம்

தேசிய மக்கள் நீதிமன்றம்

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்குமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர்.பூர்ணிமா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சந்திரன் வரவேற்றார். நீதிபதிகள் தேன்மொழி, செங்கமலச்செல்வன், சாந்தி, கோபிநாதன், பிரபாதாமஸ், விஜயகுமார், மாஜிஸ்திரேட் அருண்குமார், அரசு வக்கீல்கள் சுப்பிரமணியன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.பூர்ணிமா பேசுகையில், மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடுவதற்காக செலுத்தப்படும் கட்டணம் திருப்பி உரியவர்களுக்கு வழங்கப்படும். மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தொடரப்படும் வழக்குகள் சமரசமாக பேசி தீர்த்து வைக்கப்படும். இங்கு வழங்கப்படும் தீர்ப்புக்கு எந்த மேல்முறையீடும் செல்ல வேண்டாம். மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமரசமாக தீர்க்கப்படுவதால் வழக்காளிகளுக்கு பண விரயம், நேர விரயம் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

அறிவுரை

தற்போது மோட்டார் வாகன விபத்து வழக்குகள் அதிகம் வருகிறது. இதற்கு காரணம் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகள் வெளியே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டுமென அறிவுறுத்துங்கள். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது, அதிவேகமாகவும் செல்லக்கூடாது. மேலும் வங்கிகளில் விவசாயிகள், விவசாய கடன், பயிர் கடன் பெற்று அந்த கடன் தொகையை ஏற்கனவே செலுத்தியிருந்தால் அவர்களுக்கு வங்கி அதிகாரிகள் உங்கள் வரன்முறைகளுக்குட்பட்டு கடனுதவியை வழங்க வேண்டும் என்றார்.
இந்த முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 5,665 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 2,251 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2,767 வழக்குகளுக்கு தீர்வு

இம்முகாமில் நீதிபதிகள் சுந்தரபாண்டியன், முத்துக்குமரவேல், ஓய்வுபெற்ற நீதிபதி முருகபூபதி, மாஜிஸ்திரேட்டுகள் எஸ்.பூர்ணிமா, ஆயுஸ்பேகம், வக்கீல்கள் செந்தில்குமார், ராஜாராம், பழனியப்பன், பன்னீர்செல்வம், வேலவன், திருஞானசம்பந்தம், கருணாமூர்த்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் சரோஜா, அரிதாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 2,455 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.24 கோடியே 89 லட்சத்து 2 ஆயிரத்து 869-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 312 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 255-க்கு தீர்வு காணப்பட்டது.


Next Story