2694 வழக்குகளுக்கு ரூ35¼ கோடி மதிப்பில் சமரச தீர்வு


2694 வழக்குகளுக்கு ரூ35¼ கோடி மதிப்பில் சமரச தீர்வு
x
தினத்தந்தி 12 March 2022 10:32 PM IST (Updated: 12 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,694 வழக்குகளுக்கு ரூ.35¼ கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,694 வழக்குகளுக்கு ரூ.35¼ கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கோர்ட்டு வளாகங்களில் 19 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் இழப்பீடு கேட்ட 2 பேருக்கு இழப்பீடுக்கான காசோலை வழங்கப்பட்டது. அதன்படி பல்லடத்தை சேர்ந்த ஆசிப்கான் (வயது 32) என்பவர் பல்லடம் ரோட்டில் நெசவுப்பூங்கா அருகே கடந்த 2016-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது தனியார் பஸ் மோதி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தாலும், சேதமடைந்த அவரது வலது காலை டாக்டர்கள் அகற்றினார்கள்.
விபத்து நஷ்டஈடு
இதைத்தொடர்ந்து ஆசிப்கான் தனக்கு விபத்து நஷ்டஈடு கேட்டு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இந்த நிலையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆசிப்கானுக்கு ரூ.60 லட்சம் விபத்து நஷ்டஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் முன்வந்தது. அதற்கான காசோலை ஆசிப்கானிடம் நேற்று வழங்கப்பட்டது.
இதுபோல் பல்லடத்தை சேர்ந்த பிரபாகரன் (34) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் பனப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது கார், வேன் மோதியதில் படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சை அளித்தபோதும் அவருடைய கால் அகற்றப்பட்டது. இதனால் விபத்து நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் பிரபாகரனுக்கு ரூ.55 லட்சம் விபத்து நஷ்டஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் சம்மதித்தது. நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் அதற்கான காசோலை  பிரபாகரனிடம் வழங்கப்பட்டது. இந்த 2 வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் பாலகுமார் ஆஜராகி வாதாடினார்.
2,694 வழக்குகளுக்கு சமரச தீர்வு
மாவட்டம் முழுவதும் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4 ஆயிரத்து 283 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2 ஆயிரத்து 694 வழக்குகளுக்கு ரூ.35 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரத்து 456 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இவற்றில் 338 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.20 கோடியே 42 லட்சத்து 28 ஆயிரத்து 168 மதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி நாகராஜன், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி, 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, முதன்மை சார்பு நீதிபதி சந்திரசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி விக்னேஷ்மது, வரிவிதிப்பு தீர்ப்பாய நீதிபதி கனகராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பாரதிபிரபா, கார்த்திகேயன், ராமநாதன், உதயசூர்யா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Next Story