வேடசந்தூர் அருகே நிதி நிறுவன அதிபரை எரித்துக்கொன்ற மகளின் காதலன்


வேடசந்தூர் அருகே நிதி நிறுவன அதிபரை எரித்துக்கொன்ற மகளின் காதலன்
x
தினத்தந்தி 12 March 2022 11:01 PM IST (Updated: 12 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே நிதி நிறுவன அதிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது மகளின் காதலனே நண்பர்களுடன் சேர்ந்து எரித்து கொலை செய்தது தெரிய வந்து உள்ளது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே நிதி நிறுவன அதிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது மகளின் காதலனே நண்பர்களுடன் சேர்ந்து எரித்து கொலை செய்தது தெரிய வந்து உள்ளது.
நிதி நிறுவன அதிபர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நத்தப்பட்டியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 46). நிதி நிறுவன அதிபரான இவர், வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே போட்டோ ஸ்டூடியோவும் வைத்திருந்தார். மேலும் அரிமா சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார்.
இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இரவு வேடசந்தூரில் நடந்த அரிமா சங்க கூட்டத்தில் பாலசுப்பிரமணி கலந்துகொண்டார். பின்னர் கூட்டம் முடிந்ததும் நள்ளிரவில் அவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி உறவினர், நண்பர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணி குறித்து கேட்டார். ஆனால் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
தீயில் கருகி சாவு
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை பாலசுப்பிரமணி, தனது வீட்டிற்கு செல்லும் மண் சாலையில் தென்னம்பிள்ளை தோட்டம் என்ற இடத்தில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணி எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
எரித்துக்கொலை
இந்தநிலையில் பாலசுப்பிரமணி மர்ம சாவு குறித்து விசாரிக்க வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், முதலில் பாலசுப்பிரமணியின் குடும்பத்தினரிடம் இருந்து தங்களது விசாரணையை தொடங்கினர். அப்போது அவரது மகள் பயன்படுத்திய சிம் கார்டு எண்ணுக்கு, எந்தெந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தது என்பதை சோதனை செய்தனர்.
அதில், அவரது மகளுக்கு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகுளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரான விமல்ராஜ் (20) என்பவரிடம் இருந்து அடிக்கடி அழைப்பு வந்ததை கண்டுபிடித்தனர். இதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன்படி பாலசுப்பிரமணியை எரித்துக்கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மகள் காதல்
கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணிக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் அவரது மகள், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதேபோல் அங்குள்ள தனியார் கல்லூரியில் விமல்ராஜ் படித்து வந்தார். பாலசுப்பிரமணியின் மகள் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வந்தார். அதன்மூலம் அவருக்கும், விமல்ராஜூவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதற்கிடையே மகளின் காதல் விஷயம் பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதனால் தனது மகளை கண்டித்ததுடன், அவர் பயன்படுத்தி வந்த செல்போனை பறித்து உடைத்துவிட்டார். மேலும் சின்னகுளிப்பட்டிக்கு நேரில் சென்ற பாலசுப்பிரமணி, அங்கு விமல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது மகளுடன் பழக கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
கொலை செய்ய திட்டம்
காதலியின் செல்போனை உடைத்ததால், அவருடன் பேசமுடியாமல் விமல்ராஜ் தவித்தார். இதனால் எப்படியாவது தனது காதலியை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து, நத்தப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு விமல்ராஜ் சென்றார். அங்கு காதலியை சந்தித்து, உனது தந்தை தன்னை மிரட்டியதாகவும், அவர் 2 பேரையும் பிரித்துவிடுவார் என்றும் விமல்ராஜ் தெரிவித்தார்.
இதனால் காதலுக்கு இடையூறாக இருக்கும் பாலசுப்பிரமணியை கொலை செய்ய விமல்ராஜ் ஆலோசனை கூறினார். இதற்கு தந்தை என்று கூட பார்க்காமல் பாலசுப்பிரமணியின் மகளும் சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமல்ராஜ் தனது நண்பர்களான சின்னகுளிப்பட்டியை சேர்ந்த சரவணன் (20), கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த மற்றொரு நண்பர் அஜித் (19) ஆகியோருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டார். அவரை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று அஜித் திட்டம் போட்டு கொடுத்தார்.
பெட்ரோல் ஊற்றி...
அதன்படி பாலசுப்பிரமணி தனது நிதி நிறுவனம் மற்றும் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு இரவு 9 மணிக்கு மேல் தான் நத்தப்பட்டி தோட்டத்து வீட்டிற்கு வருவது வழக்கம். அதனை விமல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் நோட்டமிட்டனர். மேலும் சம்பவத்தன்று அரிமா சங்க கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அவர் தாமதமாக தான் வருவார் என்பதை அறிந்துகொண்ட விமல்ராஜ், தனது நண்பரான சரவணனுடன் கடந்த 10-ந்தேதி நள்ளிரவு கேனில் பெட்ரோல் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை வைத்துக்கொண்டு டொக்குவீரன்பட்டி-நத்தப்பட்டி இடையேயான மண் சாலையில் தென்னம்பிள்ளை தோட்டம் அருகில்  காத்துக்கொண்டிருந்தார்.
இதற்கிடையே அந்த வழியாக பாலசுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த விமல்ராஜ் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால், பாலசுப்பிரமணியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து, உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் விமல்ராஜ், சரவணன் ஆகியோர் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். பாலசுப்பிரமணி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
3 பேர் கைது
இதனையடுத்து சின்னகுளிப்பட்டியில் பதுங்கியிருந்த விமல்ராஜ், அவரது நண்பர்கள் சரவணன், அஜித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் நடந்த சம்பவங்களை 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, பெட்ரோல் கேன், சம்பவத்தன்று அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாலசுப்பிரமணியின் மகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையை சேர்ந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், சுப்பிரமணி, தனிப்பிரிவு போலீசார் பாஸ்கரன், குமாரசாமி உள்ளிட்ட போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்.
மகளுடனான காதலை கண்டித்த நிதி நிறுவன அதிபரை கல்லூரி மாணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story