திருச்செங்கோட்டில் பரபரப்பு: அரசு பள்ளி 2-வது மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
திருச்செங்கோட்டில் அரசு பள்ளி 2-வது மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிப்பாளையம்:
9-ம் வகுப்பு மாணவி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி சந்தனமாரி (35). இவர்களுக்கு அர்ஜூன் (16) என்ற மகனும், அர்ச்சனா (14) என்ற மகளும் இருந்தனர். அர்ச்சனா திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல மாணவி அர்ச்சனா பள்ளிக்கு சென்றார். மதியம் 2.30 மணிக்கு அவர் வாந்தி வருவதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு வகுப்பை விட்டு வெளியே சென்றார்.
மாடியில் இருந்து குதித்து தற்கொலை
இந்தநிலையில் பள்ளியின் 2-வது மாடிக்கு சென்ற அர்ச்சனா, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் அவர் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சாய்தளத்தின் இரும்பு கைப்பிடியில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவும், வயிற்றில் பலமாக அடியும் பட்டது.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், ஆசிரியைகள் அவரை மீட்டு உடனடியாக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி அர்ச்சனா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
காரணம் என்ன?
மாணவி அர்ச்சனா தற்கொலை குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பள்ளிக்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அர்ச்சனாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
உறவினர்கள் சாலை மறியல்
இந்தநிலையில் மாணவி அர்ச்சனாவின் உறவினர்கள் நேற்று இரவு திடீரென பள்ளி முன்பு திரண்டனர். அவர்கள் மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியைகள் திட்டியது தான் காரணம் என்று கூறி, பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாணவியின் தற்கொலை குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்செங்கோடு அரசு பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்து 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story