நாமக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்-நாளை தொடங்குகிறது


நாமக்கல் மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்-நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 March 2022 11:22 PM IST (Updated: 12 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நாளை தொடங்கி நடைபெற உள்ளது.

நாமக்கல்:
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடற்புழு நீக்க மாத்திரை
நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அஸ்பெண்டசோல்) வழங்கும் முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. நாளை மற்றும் 17, 18, 19-ந் தேதிகளில் முதல் சுற்றும், 21-ந் தேதி அன்று விடுபட்ட குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
1 வயது குழந்தைகள் முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத மற்றும் தாய்ப்பாலூட்டாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகின்றது. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படும்.
கல்வித்திறன் அதிகரிப்பு
இந்த மாத்திரை குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 89 ஆயிரத்து 401 பேருக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள காப்பிணி அல்லாத பெண்கள் 1 லட்சத்து 53 ஆயிரத்து 830 பேருக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படும். எனவே குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதும் தடுக்கப்படும்.
ரத்தசோகை குறைபாடு
குறிப்பாக ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும். மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவர்களின் பள்ளி வருகை பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு, விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story