ஏலகிரி மலையில் மீண்டும் தீ
ஏலகிரி மலையில் மீண்டும் தீ
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.
இந்த ஏலகிரி மலையானது 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று சமூக விரோதிகள் ஏலகிரி மலைக்கு வந்து மது அருந்திவிட்டு புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விட்டுச் சென்றதால் சிறிய அளவில் பற்றிய காடு மளமளவென 4-வது வளைவில் இருந்து 9-வது கொண்டை ஊசி வளைவுகள் வரைக்கும் காட்டுத் தீ பற்றி எரிந்தது.
இதனால் பல்வேறு அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள் காட்டுப் பகுதியில் வசிக்கும் உயிரினங்கள் போன்றவை தீயில் கருகியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரிமலை வனச்சரகர் பரந்தாமன் தலைமையிலான வனக்காவலர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் காட்டுத் தீயானது மளமளவென பரவி மலையில் மேல் பகுதிக்கு சென்றது.
வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து காட்டுத் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டும், பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஏலகிரி மலை தீப்பற்றி எரியும் சம்பவம் 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story