கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:
மின் மோட்டார் பழுது
கறம்பக்குடி அருகே துவார் ஊராட்சியை சேர்ந்த கெண்டையன்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள 6-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் மின்மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டது.
சாலை மறியல்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் துவார் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை கெண்டையன்பட்டியில் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்க கோரியும், மின்மோட்டாரை சீரமைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினார்கள்.
இத்தகவல் அறிந்த மழையூர் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பேசி மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story