கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்


கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 13 March 2022 12:15 AM IST (Updated: 13 March 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர் பகுதியில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கடையூர்:
திருக்கடையூர் பகுதியில் தேங்கி  கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் எடுத்துச் செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் மூட்டைகள்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், ஆக்கூர், கிள்ளியூர், மாமாகுடி உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் பல நாட்களாக அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் தேங்கி உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
சம்பா நெல் சாகுபடி செய்து அறுவடை நேரத்தில் கனமழை பெய்ததால் நெல் பயிர்கள் சேதமடைந்து மகசூல் பாதிக்கப்பட்டது. இதில் ஓரளவு காப்பாற்றப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் நிரம்பி உள்ளது. கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுக்க லாரிகள் கொள்முதல் நிலையத்திற்கு வருவது இல்லை.
அப்படியே வந்தாலும் ஓரிரு லாரிகள் தான் வருகிறது. நெல் மூட்டைகள் எடுத்து செல்லப்படாமல் உள்ளதற்கு லாரிகள் தட்டுப்பாடு என காரணம் கூறுகிறார்கள். அங்கு நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதால், கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. 
நெல்லை எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை
இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள மூட்டைகளை உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story