வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்
அச்சங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொண்டி,
திருவாடானை யூனியன் அச்சங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடம்பாகுடி, அச்சங்குடி, இளையான்குடி கண்மாய் வரத்துக் கால்வாய்களில் மழைநீரை தேக்கி நிலத்தடி நீரை பாதுகாக்கவும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் மழைநீர் வீணாகாமல் கண்மாய், ஊருணிகளுக்கு நேரடியாக தங்கு தடையின்றி செல்லவும் ஏதுவாக வரத்துக் கால்வாய்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று கண்மாய் வரத்துக்கால்வாய்கள் தூர்வாரும் பணியில் அச்சங்குடி ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் பணியை மேற்கொண்டு வருவதால் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.270 வரை வழங்கப்படுகிறது என்று ஊராட்சி தலைவர் கடம்பாகுடி கணேசன் தெரிவித்தார். இந்த பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள், ஒன்றிய பொறியாளர் ஜெயந்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமலிங்கம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story