கப்பல் மோதி காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.25½ லட்சம் நிவாரணம்
குளச்சல் கடலில் கப்பல் மோதி காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.25½ லட்சம் நிவாரணத்தை மக்கள் நீதிமன்றத்தில் போக்சோ நீதிபதி சந்திரா வழங்கினார்.
நாகர்கோவில்:
குளச்சல் கடலில் கப்பல் மோதி காயமடைந்த மீனவர்களுக்கு ரூ.25½ லட்சம் நிவாரணத்தை மக்கள் நீதிமன்றத்தில் போக்சோ நீதிபதி சந்திரா வழங்கினார்.
மக்கள் நீதிமன்றம்
நாடு முழுவதும் கோர்ட்டுகளில் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நாகர்கோவில், குழித்துறை, பத்மநாபபுரம் இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய 5 கோர்ட்டுகளிலும் மொத்தம் 12 பெஞ்சுகளில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், சொத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் மற்றும் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வராமல் லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு மட்டும் விசாரணைக்கு வரும் வழக்குகள் என மொத்தம் 2935 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
மீனவர்களுக்கு நிவாரணம்
நாகர்கோவில் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி அருள்முருகன் வழிகாட்டுதலின் பேரில் போக்சோ கோர்ட்டு நீதிபதி சி.பி.எம். சந்திரா தலைமையில் லோக் அதாலத் நடந்தது. தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், முதலாவது சார்பு நீதிபதி சுரேஷ்குமார், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நம்பி ராஜன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு இரண்டாவது கோர்ட்டு நீதிபதி வாஞ்சிநாதன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 3-வது கோர்ட்டு நீதிபதி சிவகுமார் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் ஒவ்வொரு வழக்குகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டது.
நாகர்கோவிலில் நடந்த லோக் அதாலத் மூலம் கடந்த 22-10-2021 அன்று இரவு குளச்சலில் தனியார் கப்பல், விசைப்படகு மீது மோதியதில் காயம் அடைந்த 17 மீனவர்களுக்கு நிவாரண நிதி தலா ரூ.1.½ லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் ரூ.25½ லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த காசோலையை சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு போக்சோ கோர்ட்டு நீதிபதி சி.பி.எம். சந்திரா வழங்கினார்.
2,278 வழக்குகளுக்கு தீர்வு
குமரி மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் மொத்தம் 2278 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் இழப்பீடு தொகையாக ரூ.8 கோடியே 91 லட்சத்து 29 ஆயிரத்து 507 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன், துணைத் தலைவர் பிரதாப், செயலாளர் டி.கே.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story