மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதம்
என்.எல்.சி. சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அருகே கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்டது தொல்காப்பியர் நகர், பாரதி நகர், அருந்ததியர் தெரு பகுதிகள் ஆகும். இந்த பகுதிகளில் என்.எல்.சி. நிர்வாகம், நிலக்கரி சுரங்கம் 1- விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதற்காக அங்குள்ள நிலங்களை கையகப்படுத்தும் வகையில், அங்கு வசிக்கும் மக்களை காலி செய்து செல்லுமாறு நிர்வாம் இறுதிகட்ட நோட்டீசையும் அவர்களிடம் வழங்கி இருக்கிறது. ஆனால் அந்த பகுதி மக்கள் தங்களுக்கு மாற்று இடம் அளிக்காமல் தங்களை வெளியேற்ற கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
உண்ணாவிரதம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம்-2 முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் 12 மணியளவில் அந்த பகுதி மக்கள் தொல்காப்பியர் நகர் பகுதியில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரைக்கும் போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அறிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
பேச்சுவார்த்தை
மாலை 5 மணிக்கு நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மலர்விழி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வருகிற 16-ந்தேதி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஊர் முக்கிய பிரமுகர்கள், என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சுமூக பேச்சுவர்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story