கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா


கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா
x
தினத்தந்தி 13 March 2022 1:33 AM IST (Updated: 13 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா 15-ந் தேதி தொடங்குகிறது

அழகர்கோவில், 
கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. 
கள்ளழகர் கோவில் 
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி, என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் தனி சிறப்புடையது ஆகும். 
இந்த விழாவானது வருகிற 15-ந் தேதி காலையில் கோவிலில் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் பல்லக்கில் புறப்பாடாகி வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் சுவாமி இருப்பிடம் போய் சேர்வார். தொடர்ந்து 16-ந் தேதியும், 17-ந் தேதியும் அதே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 
திருக்கல்யாணம் 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 4-ம் திருநாள் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள், ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாளை மணக்கிறார். 
திருக்கல்யாண வைபவம் நடந்து முடிந்ததும் விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் நடைபெறும். மேலும் 19-ந் தேதி 5-ம் திருநாள் அன்று காலை 10.30 மணிக்கு சுவாமிக்கும், தேவியர்களுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர்  மாலையில் மஞ்சள் நீர்சாற்று முறையும் நடைபெறும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 
இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Next Story