வடகிழக்கு மாநில கலைவிழா தொடங்கியது
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் வடகிழக்கு மாநில கலை விழா நேற்று தொடங்கியது. கலைஞர்களின் கண்கவர் நடனங்களை மக்கள் கண்டுகளித்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் வடகிழக்கு மாநில கலை விழா நேற்று தொடங்கியது. கலைஞர்களின் கண்கவர் நடனங்களை மக்கள் கண்டுகளித்தனர்.
வடகிழக்கு மாநில கலைவிழா தொடக்கம்
தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ‘ஆக்டேவ்’ என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா-2022 தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. தெற்கு மத்திய பண்பாட்டு மைய துணை இயக்குனர் கவுரி மராட்டே வரவேற்று பேசினார். வடகிழக்கு மாநில கலைவிழாவை தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தென்னகப்பண்பாட்டு மைய நிர்வாக ஆலோசகர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர் நன்றி கூறினார்.
கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
பின்னர் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல் கைவினைப் பொருட்காட்சி, உணவு திருவிழாவும் தொடங்கி உள்ளது.
தஞ்சை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து கலைநிகழ்ச்சியை கண்டுகளித்தனர். மேலும் வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை உணவுகளையும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இந்த கலைவிழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை வடகிழக்கு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
பழங்குடியினர் நடனங்கள்
இந்த கலைவிழாவை தொடர்ந்து வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலைவிழா, கைவினைப்பொருட்காட்சி, உணவு திருவிழா ஆகியவையும் நடக்கிறது.
வடகிழக்கு மாநில கலைவிழாவை மக்கள் கண்டுகளிப்பதற்கு வசதியாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அந்த இருக்கைகள் போதுமானதாக இல்லாததால் ஏராளமானோர் குழந்தைகளுடன் நின்று கொண்டே கலைநிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதனால் கூடுதல் இருக்கைகள் போட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story