குமரி மாவட்டத்தில் வறுத்தெடுக்கும் வெயில்: வெப்பத்தை தணிக்க திற்பரப்பு அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
குமரி மாவட்டத்தில் வறுத்தெடுக்கும் வெயிலின் காரணமாக பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 21.80 அடியாக குறைந்துள்ளது. மேலும், கோைட வெப்பத்தை தணிக்க திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வறுத்தெடுக்கும் வெயிலின் காரணமாக பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 21.80 அடியாக குறைந்துள்ளது. மேலும், கோைட வெப்பத்தை தணிக்க திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
வெயிலால் மக்கள் அவதி
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அணைகள் நிரம்பியதால், உபரி நீர் திறந்து விடப்பட்டது. குடியிருப்புகள், விளைநிலங்கள் அனைத்தும் மூழ்கின. இதனால் மழை ஓய்ந்தால் போதும் என்ற எண்ணம் குமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மாவட்டத்தில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
நீர்மட்டம் குறைகிறது
இதற்கிடையே குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40.17 அடியாக இருந்தது. அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 418 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 686 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 21.80 அடியாக இருந்தது. வினாடிக்கு 66 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 145 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சிற்றார் அணைகள்
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 10.69 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 10.79 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்தோ, வெளியேற்றமோ இல்லை.
திற்பரப்பு அருவி
கோதையாற்றில் தற்போது குறைவான தண்ணீர் பாய்வதால் திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் பாய்கிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் திற்பரப்பு அருவிக்கு படை எடுக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, எதிரே உள்ள பூங்காவில் விளையாடி மகிழ்கிறார்கள். மேலும், அருவியின் மேல் பகுதியில் தடுப்பணையில் படகு சவாரி செய்து குதூகலத்துடன் வீடு திரும்புகிறார்கள். இதனால், தற்போது திற்பரப்பு அருவி களை கட்டியுள்ளது.
Related Tags :
Next Story