தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; தென்னை மரங்கள் சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின.
தாளவாடி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, கடம்பூர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர், ஜீர்கள்ளி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்திவிட்டு சென்றுவிடுகிறது. இதுபோன்ற சம்பவம் தாளவாடியை அடுத்த திகினாரை பகுதியில் நடந்து உள்ளது.
தாளவாடியை அடுத்த திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 40). இவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து ெவளியேறிய 4 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் தென்னை மரங்களின் கிளைகளை பிடித்து முறித்து தின்ன தொடங்கின. யானைகளை கண்டதும் தோட்டத்தில் காவலுக்கு படுத்து இருந்த ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து பக்கத்து தோட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 50 தென்னை மரங்கள் சேதம் அடைந்தன.
Related Tags :
Next Story