பெண் வியாபாரி கொலையில் தந்தை-மகன் கைது தர்மபுரியில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்
மைசூருவில் பெண் வியாபாரி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு தர்மபுரியில் பதுங்கி இருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர்
மைசூரு:
மைசூருவில் பெண் வியாபாரி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழ்நாடு தர்மபுரியில் பதுங்கி இருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
பெண் வியாபாரி கொலை
மைசூரு நகர் கேத்தமாரனஹள்ளி கே.என்.புரா 6-வது தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 57). இவரது மகன் கிரீஷ் (29). இவர்களின் வீட்டின் அருகே சுனிதா என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி சுனிதா அழுகிய தக்காளியை சிவராஜின் வீட்டின் முன்பு வீசியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சுனிதாவிடம் சிவராஜ் மற்றும் கிரீஷ் ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.
இந்த தகராறு முற்றி, சிவராஜிம், அவரது மகன் கிரீசும் சேர்ந்து சுனிதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் சுனிதா பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற சுனிதாவின் தாய் பாரதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் தந்தையும், மகனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தந்தை-மகன் கைது
இதுகுறித்து உதயகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். மேலும் சிவராஜ் மற்றும் அவரது மகன் கிரீசை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், பெங்களூரு, தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்று 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிவராஜிம், கிரீசும் தமிழ்நாடு தர்மபுரியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த சிவராைஜயும், கிரீசையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மைசூருவுக்கு அழைத்து வந்து உதயகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார், தந்தை, மகன் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story