சில கட்சிகள் தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என நினைப்பது ஏன்?-சஞ்சய் ராவத் கேள்வி


படம்
x
படம்
தினத்தந்தி 13 March 2022 6:39 PM IST (Updated: 13 March 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

சில கட்சிகள் தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என நினைப்பது ஏன்? என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

மும்பை, 
சில கட்சிகள் தங்களை சட்டத்திற்கு மேலானவர்கள் என நினைப்பது ஏன்? என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
பட்னாவிசிடம் விசாரணை
போன் ஓட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக பி.கே.சி. சைபர் கிரைம் போலீசார் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும் இது தொடர்பாக அவர்கள் நேற்று தேவேந்திர பட்னாவிஸ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்தநிலையில் போலீசார் தேவேந்திர பட்னாவிசுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கட்சியினர் போலீசார் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பிய நோட்டீசின் நகலை எரித்து ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதேபோல நிதேஷ் ரானே எம்.எல்.ஏ., பிரசாத்லாட், பிரவின் தாரேக்கர் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் தேவேந்திர பட்னாவிஸ் வீடு முன் திரண்டு இருந்தனர். 
சஞ்சய் ராவத் கேள்வி
இந்தநிலையில் பா.ஜனதா போராட்டம் தொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் டுவிட்டரில் கூறியிருந்ததாவது:- 
ஏன் சிலர், அரசியல் கட்சிகள் அவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் என நினைக்கின்றனர்?. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மத்திய முகமைகள் பல மராட்டிய மாநில மந்திரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு விசாரணை நடத்த சம்மன் அனுப்பி உள்ளது. அவர்களும் விசாரணைக்கு சென்றனர். ஜனநாயகத்தில் யாருக்கும் சிறப்பு உரிமைகள் இல்லை. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் தான். அப்படி இருக்கையில் ஏன் இந்த நாடகம்?. 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல இந்த விவகாரம் தொடர்பாக மந்திரி ஆதித்ய தாக்கரே கூறுகையில், "மத்திய அரசு தங்கள் எதிரிகளுக்கு எதிராக அரசு எந்திரத்தை பயன்படுத்துவது போல, மகாவிகாஸ் அகாடி அரசு தங்கள் எதிரிகளுக்கு எதிராக தங்கள் முகமைகளை பயன்படுத்தவில்லை. சட்ட நடவடிக்கையை தான் நாங்கள் முன்எடுக்கிறோம். பா.ஜனதா விரக்தியில் உள்ளதால், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

Next Story